வெள்ளி, 6 ஜனவரி, 2012

நடிகர் சீயான் விக்ரமுக்கு சென்னை சிவில் நீதிமன்றம் நோட்டீசு


தமிழ் திரையுலகில் கரிகாலன் என்ற தலைப்பில் சினிமா படம் எடுக்கத் தடை கேட்டு தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நடிகர் விக்ரமுக்கு சென்னை சிவில் நீதிமன்றம் நோட்டீசு பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.
சீயான் விக்ரமுக்கு எதிராக தமிழகத்தின் போரூரை சேர்ந்த ராஜசேகர் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். இவர் பிரியமுடன் பிரிவோம் என்ற ஆவணப்படம், தொலைக்காட்சி தொடர்களுக்கு இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அவர் தன்னுடைய மனுவில், இந்தியாவில் முதல் அணையை சோழ சக்கரவர்த்தி கரிகாலன் கட்டியுள்ளார். அவரது வரலாற்றை படித்து, அவர் மீது மிகுந்த பற்று கொண்டேன்.
ஆனால் வரலாற்று புத்தகத்தில் கரிகாலனை பற்றி விரிவான தகவல் இல்லை. இதையடுத்து கரிகாலன் வரலாற்றின் சாராம்சத்தை வைத்து கதை ஒன்றை எழுதினேன்.
இந்த கதைக்கு கரிகாலன் என்ற தலைப்பை வைத்துள்ளேன். அதை சினிமாவாக தயாரிக்க நடிகர்கள் ரஜினிகாந்த், விஜயகாந்த் ஆகியோரின் உதவியாளர் உட்பட பலரை அணுகினேன்.
மேலும் கரிகாலன் என்ற கதையின் தலைப்பை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் கடந்த 1996-ம் ஆண்டு பதிவு செய்தேன். அந்த பெயர் பதிவை புதுப்பிக்க பல முயற்சிகள் எடுத்தும் முடியவில்லை.
இந்நிலையில் கரிகாலன் என்ற பெயரில் நடிகர் விக்ரம் நடிக்கும் படத்தை சில்வர் லைன் என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. கண்ணன் என்பவர் இயக்குகிறார்.
கரிகாலன் என்ற பெயரில் இவர்கள் படம் தயாரித்து வெளியிட்டால் எனக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஏற்படும். என் திரையுலக வாழ்வும் பாதிக்கும். எனவே கரிகாலன் என்ற பெயரில் படத்தை தயாரிக்க தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை நீதிபதி விஜயகாந்த் விசாரித்தார். இந்த மனுவுக்கான பதில் மனுவை வருகிற 12-ம் திகதிக்குள் தாக்கல் செய்யும் படி நடிகர் விக்ரம், இயக்குனர் கண்ணன், சில்வர் லைன் நிறுவனத்தின் உரிமையாளர் ஆகியோருக்கு நோட்டீசு அனுப்ப உத்தர விட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக