செவ்வாய், 27 டிசம்பர், 2011

தேவா, எல்.ஆர்.ஈஸ்வரிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது


இசை அமைப்பாளர் தேவா, பிரபல பாடகி எல்.ஆர். ஈஸ்வரி ஆகியோருக்கு மஸ்கட் தமிழ்ச் சங்கம் சார்பாக வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
மஸ்கட்டில் உள்ள குரும் அரைவட்ட அரங்கில் மஸ்கட் தமிழ் சங்கம் சார்பாக 'கீதம் சங்கீதம்' என்ற மாபெரும் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழ் வகுப்பு மாணவர்களின் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் நிகழ்ச்சி தொடங்கியது. மஸ்கட் தமிழ் சங்க தலைவர் ஜானகிராமன் வரவேற்பு உரையாற்றினார்.
தமிழ் சங்கத்தின் கலாச்சார மற்றும் இலக்கியச் செயலாளர் பஷீர் முகமது நிகழ்ச்சியில் தொகுப்பு உரையாற்றினார். தமிழ் சங்க துணைத் தலைவர் அகமத் ஜமீல் வரவேற்றார்.
இந்த நிகழ்ச்சியில் பிரபல பின்னணி பாடகர் கார்த்திக், பாடகிகள் சுசித்ரா, சைந்தவி, சென்னை சாதகப் பறவைகள் இசைக் குழுவினர் இணைந்து 4 மணி நேரம் திரை இசைப் பாடல்களை பாடி அரங்கில் கூடிய இருந்த 6000 தமிழ் ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தினர்.
விஜய் தொலைக்காட்சி புகழ் சிவகார்த்திகேயன் தனது வழக்கமான நகைச்சுவை மற்றும் மிமிக்ரியுடன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில் தேனிசைத் தென்றல் தேவா பாடிய “கவலைப்படாதே சகோதரா” என்ற பாடல் ரசிகர்களிடையே கைத்தட்டலை பெற்று தந்தது.
எல்.ஆர். ஈஸ்வரி பாடிய “காதோடுதான் நான் பாடுவேன்” என்ற பாடல் அரங்கில் இருந்த மூத்த ரசிகர்களுக்கு இளமைக்கால நினைவுகளை ஏற்படுத்தியது.
அதன்பிறகு பாடப்பட்ட எலந்தப் பழம், எலந்தப் பழம் பாடல் பார்வையாளர்களை குதுகலப்படுத்தியது. பாடகர்கள் கார்த்திக்கும், சுசித்ராவும் பாடிய பாடல்கள் இளம் பார்வையளர்களை ஆனந்தப்படுத்தியது.
சினிமா துறையில் இசையமைப்பாளர் தேவா மற்றும் பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி ஆகியோரின் சாதனைகளை பாராட்டி மஸ்கட் தமிழ் சங்கம் சார்பாக வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது. நிகழ்ச்சியின் முடிவில் விளையாட்டுச் செயலாளர் ரகுமுத்து குமார் நன்றியுரை வழங்கினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக