வெள்ளி, 16 டிசம்பர், 2011

கணக்காளர் மரணம் குறித்து வடிவேலு பதலளிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு


கணவரின் மரணம் குறித்து நடிகர் வடிவேலுவுக்கு எதிரான புகாரை, சிறப்புக் குழு அமைத்து விசாரிக்கக் கோரி, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மனுவுக்கு பதிலளிக்கும்படி அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த பாண்டீஸ்வரி என்பவர் கடந்த ஆகஸ்ட் மாதம் உள்துறைச் செயலர், டி.ஜி.பி.,க்கு அனுப்பிய மனு: இயக்குனர் ராஜ்கிரணின் சினிமா நிறுவனத்தில் எனது கணவர் வேலுசாமி, அக்கவுன்டன்ட் ஆக பணியாற்றினார்.
அப்போது, சினிமா பட வாய்ப்பு கேட்டு நடிகர் வடிவேலு வந்தார். ராஜ்கிரணிடம் சிபாரிசு செய்யுமாறு எனது கணவரிடம் வடிவேலு கேட்டார். முதலில் வடிவேலுவை கம்பெனி ஊழியராக சேர்த்தார். அதன்பின், அவரது படத்தில் நடிக்க வைத்தார்.
ஒரு கட்டத்தில், தனது கணக்கு வழக்குகளை பார்த்துக் கொள்ளுமாறு எனது கணவரிடம் வடிவேலு கேட்டார். அவரது மேலாளராக எனது கணவர் ஆனார். ரங்கராஜபுரத்தில் வடிவேலுவின் அலுவலகம் இருந்தது. எனது பெற்றோரை கவனிப்பதற்காக, நான் மதுரை சென்று விட்டேன். அடிக்கடி மதுரைக்கு எனது கணவர் வந்து எங்களை பார்த்துக் கொள்வார். கடந்த 2009ம் ஆண்டு பிப்ரவரி 3ம் தேதி எனது கணவரை மொபைல் போனில் தொடர்பு கொண்டேன். மறுநாள் மதுரை வருவதாக தெரிவித்தார். அன்று காலையில் மொபைல் போனில் அவரை அழைத்தேன். "சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அவரது உடல் தூக்கில் தொங்கி கொண்டிருப்பதாக, தெரிவிக்கப்பட்டது.
இந்தத் தகவல் வடிவேலுவுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் அங்கு வந்து, உடலை, சுருக்கு கயிற்றில் இருந்து அகற்றுமாறு கூறியுள்ளார். அதற்கு வீட்டின் உரிமையாளர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இருந்தும் வடிவேலு பிடிவாதமாக இருந்துள்ளார். உடலை அங்கிருந்து அகற்றியுள்ளனர். பின்னர், நள்ளிரவில் மதுரைக்கு உடல் கொண்டு வரப்பட்டது. போலீஸ் வாகன பாதுகாப்புடன் வடிவேலு வந்தார். அவருக்கு சிலர் பாதுகாப்பாக வந்தனர். ஆனால், இறுதி சடங்கில் வடிவேலு கலந்து கொள்ளவில்லை. வயிறு வலி காரணமாக எனது கணவர் தற்கொலை செய்து கொண்டதாக செய்தி வெளியாகியது. ஆனால், அவருக்கு வயிறு வலி இல்லை. ஒரு வாரம் கழித்து சென்னை வந்தேன். வடிவேலு வீட்டுக்கு சென்றேன். அவரிடம் எனது உறவினர் விசாரித்த போது, மனநோயாளி போல் நடந்து கொண்டார். எங்களை அச்சுறுத்தினார்.
எனது கணவரின் மரணத்தில் வடிவேலு, அவரது ஆட்களுக்கு உள்ள தொடர்பை விசாரிக்க வேண்டும். முறையான விசாரணை நடத்தாத போலீஸ் மற்றும் வருவாய் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது. ஐகோர்ட்டில் பாண்டீஸ்வரி தாக்கல் செய்த மனுவில், "எனது கணவர் கொலை செய்யப்பட்டிருப்பார் என சந்தேகிக்கிறேன். முன்னாள் முதல்வரின் மகனுக்கு, வடிவேலு மிகவும் நெருக்கமானவர். எனக்கும், மகன்களுக்கும் அச்சுறுத்தல் உள்ளது. பள்ளி செல்லும் எனது இரண்டு மகன்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். சிறப்புக் குழுவை நியமித்து, புகாரை விசாரிக்க உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இம்மனு நீதிபதி என்.பால்வசந்தகுமார் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் மணிகண்டன் வதன் ஆஜரானார். அரசு தரப்பில் பதிலளிக்க வழக்கறிஞர் ராஜேஸ்வரன் நோட்டீஸ் பெற்றுக் கொண்டார். அரசிடம் விளக்கம் பெறுமாறு அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஒரு வாரத்துக்கு, நீதிபதி என்.பால்வசந்தகுமார் தள்ளிவைத்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக