வெள்ளி, 16 டிசம்பர், 2011

போராளி


சொந்தங்களால் மனநோயாளியாக சித்தரிக்கப்பட்டு விரட்டப்படும் ஆக்ரோஷ இளைஞன் வெகுண்டெழுந்தால் என்னவாகும் என்பதே போராளியின் கதை.
கிராமத்து இளைஞன் சசிகுமாரும், அல்லரி நரேஷும் சமுதாயத்தில் முன்னேற துடிக்கும் வெறியுடன் சென்னையில் பெட்ரோல் பேங்கில் வேலைக்கு சேர்ந்து கஞ்சா கருப்பின் வீட்டில் அடைக்கலமாக நுழைகிறார்கள்.
சசிகுமார், அல்லரி நரேஷ், கஞ்சா கருப்பு, பெட்ரோல் பேங்கில் வேலை செய்யும் நிவேதா ஆகிய நான்கு பேரும் ஒன்று சேர்ந்து பிள்ளையார் பெய்ட் செர்வீஸ் என்னும் புதிய தொழிலை தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார்கள்.
சந்தர்ப்ப வசத்தால் குடியிருப்பில் அருகே வசிக்கும் ஸ்வாதியுடன் சசிகுமாருக்கு முதலில் மோதல் பின்னர் காதல் ஏற்படுகிறது. தொழில் விளம்பரத்திற்காக சசிகுமார், அல்லரி நரேஷ் படத்தை அவர்களுக்கு தெரியாமல் இதழ்களில் கஞ்சா கருப்பு வெளியிட பிரச்சினை ஆரம்பமாகிறது. சசிகுமாரை கொல்ல ஒரு பெரிய சொந்தக்கார கும்பல் சென்னைக்கு வருகிறது. இவர்களிடமிருந்து சசிகுமார் தப்பித்தாரா? ஏன் சசிகுமாரை கொல்ல துடிக்கிறார்கள்? என்பது யாரும் எதிர்பாராத அதிரடி சண்டைக்காட்சிகளுடன் திகில் நிறைந்த சஸ்பென்ஸ் த்ரில்லான மீதிக் கதை.
ஒரு படம் எவ்வளவு சூப்பர் ஹிட் படமாக இருந்தாலும் ஏதோ ஒரு நிமிடம் அல்லது ஒரு நொடி அல்லது ஒரு துளியாவது கண்டிப்பாக போர் அடிக்கும். ஆனால் இந்தப்படத்தில் அப்படி ஒரு வாய்ப்பே இல்லை. படம் துவங்கியவுடன் சீட் நுனிக்கு வந்தால் படம் முடியும் வரை நம்மை அப்படியே உட்கார வைத்து விடுகிறார்கள்.
சசிகுமார்-முந்தைய இரண்டு படங்களில் இருந்த ஆக்ரோஷம் மூன்றாவது படத்தில் மூன்று மடங்கு விஸ்வரூபமெடுத்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். இரண்டு குதிரையின் மேல் நின்றபடியே பயணிக்கும் முதல் தில், த்ரில் காட்சியிலிருந்து, அடுக்கு மாடி குடியிருப்பில் நடத்தும் நக்கல் நையாண்டி ரகளை, கிழவியிடம் வாங்கும் திட்டு, ஸ்வாதியுடன் மோதல் ஏற்பட்டு கலாய்ப்பது, சக தோழியின் குடும்ப நிலையை கண்டு சரி செய்வது, தொழிலில் சின்சியராக உழைப்பது, நண்பனுக்காக எதுவும் செய்வது என்று ஒரு பொறுப்புள்ள இளைஞனாக முதல் பாதியில் விறுவிறுப்பாக கதை நகர இடைவேளைக்குப் பிறகு எதிர்பாராத மனநோயாளி என்று முத்திரை ஃபளாஷ்பேக் கதைக்களத்துடன் ஆக்ரோஷ வெறி கொண்ட முரட்டு இளைஞனாக மாறுபட்ட நடிப்பில் தூள் பரத்துகிறார்.
சடைமுடி கெட்டப், வித்தியாசமான எளிமையான வசன உச்சரிப்பு அவருக்கு ப்ளஸ் பாயிண்டாக மனதைத் தொடும் அமைதியான ஆனால் உறுதியான தன்னம்பிக்கை நிறைந்த வாழ்க்கையை பாஸிடிவ்வாக எடுத்துக் கொள்ளும் இளங்குமரன் கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார்.
'குறும்பு' படத்திற்கு பிறகு நரேஷ் ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் நடித்திருக்கிறார். சுறுசுறுப்பு இளைஞனாக, நண்பனாக, காதல் காமெடி செய்யும் குறும்புக்கார இளைஞன் வேடத்தில் முதல் பாதி முத்திரை பதித்தாலும், இரண்டாவது பாதியில் மனநிலை பாதிக்கப்பட்ட இளைஞனாக தத்ரூபமான அப்பட்டமாக மனதை பதறச் செய்யும் நோயாளியாக நடிப்பில் மிளிர்ந்து தனி முத்திரை பதித்திருக்கிறார்.
ஸ்வாதி இவரிடம் செல்போனில் தொடர்பு கொண்டு சிலோன் பரோட்டா வாங்கி தரேன் என்க, அதற்கு சசிகுமாரோ சிலோன்னாலே பிடிக்காது. இதுல சிலோன் பரோட்டாவா? என சொல்லும் போது தியேட்டரில் அப்ளாஸ் விழுகிறது.
'சுப்ரமணியபுரம்' படத்திற்கு பிறகு ஸ்வாதி தமிழில் நடித்திருக்கும் படம். பக்கத்து வீட்டுப் பெண் தோற்றமும், அந்த பெரிய கண்களுடன் சசிகுமாரை அவர் பார்க்கும் காதல் பார்வையும் வசீகரிக்கின்றன. 'கண்கள் இரண்டால்...' போல் ஒரு டூயட் பாடலாவது இருந்திருந்தால் சேனல்களில் அடிக்கடி போட்டு படத்திற்கு இலவச விளம்பரத்தைக் கொடுத்திருப்பார்கள். ஏனோ அப்படி ஒரு பாடலை இயக்குநர் படத்தில் வைக்கவேயில்லை.
பிளாஷ்பேக்கில் சசிகுமாருக்கு உதவி செய்யும் கிராமத்துப் பெண்ணாக வசுந்தரா. குறைவாக வந்தாலும் நிறைவாக நடித்திருக்கிறார். அதிலும் அவரைத் தாக்க வருபவர்களை தனியாக சமாளித்து இவர் மிரட்டும் தொனியே தனிதான். நிவேதா- படம் முழுவதும் வருவதால் நடிப்பிற்கு பஞ்சமில்லை.
இடைவேளை வரை படத்தின் கலகலப்புக்கு பெரிதும் உதவியிருக்கிறார் கஞ்சா கருப்பு. ஆ..ஊ... என அலட்டல் இல்லாமல் இயல்பாகப் பேசி சிரிக்க வைக்கிறார்.சசிகுமாரின் நண்பராக பரோட்டா சூரி, வீட்டுக்காரராக ஞானசம்பந்தம், டாக்டராக ஜெயபிரகாஷ், மற்றும் சசிகுமார் தங்கியிருக்கும் வீட்டின் காம்பவுண்டில் குடியிருக்கும் மற்ற கதாபாத்திரங்களையும் குறிப்பிட வேண்டும். அந்த காட்சிகள் அனைத்தும் மிகவும் யதார்த்தமாக அமைந்துள்ளன.
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்- சமுத்திரக்கனி. வெற்றிப் படத்தை எப்படி கொடுக்க வேண்டும் என்ற டெக்னிக் தெரிந்து புதுமையான கதைக்களத்துடன் களம் இறங்கியிருக்கிறார். மனநோயளிகளின் அவல வாழ்க்கையை சித்தரித்து, அவர்களின் பரிதாப நிலையை படம் பிடித்து, அதற்கு காரணம் சுற்றியிருக்கும் சொந்தங்களே என்று இடித்துரைத்திருக்கும் விதம் புதுமை அருமை.
ஒளிப்பதிவு-எஸ்.ஆர்.கதிர். ஒரு படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருப்பது காட்சிக் கோணங்களின் ஒளிப்பதிவு, அது இந்தப் படத்தில் மிகையாக இருக்கிறது. நகரத்திலிருந்து கிராமத்திற்கு பயணிக்கும் கதையை லாவகத்தோடு கையாண்டு, ஒவ்வொரு காட்சிகளிலும் ஒரு விறுவிறுப்பை ஏற்படுத்தி, அடுக்குமாடி குடியிருப்பு, துரத்தி துரத்தி சந்து பொந்துகளிலும், கிராமத்திலும் நடக்கும் சண்டைக் காட்சிகள் மெய் சிலிர்க்க கிறுகிறுக்க வைக்கிறது.
படத்தின் முதல் பாதியை நகைச்சுவைகளாலும், எதார்த்தமான சம்பவங்களாலும் கதையை கோர்த்து தந்திருக்கும் சமுத்திரக்கனி, இரண்டாவது பாதியில் விறுவிறுப்பு, ஆக்ஷன் கலந்து அசத்தியிருக்கிறார்.
படத்தில் பாடல்கள் குறைவானாலும் பின்னணி இசையில் நம்மை படத்தோடு ஒன்றிவிட செய்கிறார் இசையமைப்பாளர் சுந்தர் சி. பாபு. குறிப்பாக படத்தின் இரண்டாம் பகுதியில் அவரது இசை படத்தின் வேகத்திற்கு நம்மையும் ஒன்றவைக்கிறது. 'போராளி', படத்திற்கு ஏற்ற தலைப்பு என்பதை விட தலைப்பிற்கு ஏற்ற படம் என்று கூறலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக