வெள்ளி, 3 பிப்ரவரி, 2012

தயாரிப்பாளர் சங்கத்திற்கு செக் வைக்கும் நிலை


சிறிய பட்ஜெட் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயல்பாடுகளுக்கு செக் வைக்கும் நிலை ஏற்படலாம் என்று சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.
சினிமா தொழிலாளர்கள் பிரச்னைக்கு பத்து நாட்களாகியும் முடிவு காணப்படாததால், தயாரிப்பாளர்கள் இடையே திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
சங்க நிர்வாகிகள் சுயநலத்துடன் செயல்படுவதாக பல தயாரிப்பாளர்கள் குறைகூறத் துவங்கியுள்ளதால் சிறிய பட்ஜெட் தயாரிப்பாளர்களின் அவசரக் கூட்டம் இன்று சென்னையில் நடக்கவுள்ளது.இதில் எடுக்கப்படும் முடிவால் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயல்பாடுகளுக்கு செக் வைக்கும் நிலை கூட ஏற்படலாம் என்று சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.
சினிமா தொழிலாளர்கள் சம்பளப் பிரச்சனை தொடர்பாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும், தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்திற்கும் (பெப்சி) இடையே ஏற்பட்டுள்ள மோதலால் தமிழ்ப் படங்களின் படப்பிடிப்புகள் கடந்த 10 நாட்களாக நிறுத்தப்பட்டுள்ளதால் 26 படங்களின் படப்பிடிப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் மூலம் கடந்த 22ம் திகதி நடத்தப்பட்ட அவசர பொதுக்குழு கூட்டத்தில் பெப்சிக்கும், தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும் இடையே எந்த ஒப்பந்தமும் இல்லை என்று முடிவுவெடுக்கப்பட்டுள்ளது.
சினிமா தொழிலாளர்கள் சம்பளப் பிரச்சனை தொடர்பாக புதிய குழு அமைத்து, அதன் மூலம் தொழிலாளர்களின் பணிக்கேற்றார்போல் சம்பளம் நிர்ணயிக்கப்படும். இதற்கு பெப்சி ஒத்துக்கொண்டால் தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.
இல்லையெனில் தனி தொழிலாளர்கள் சங்கம் ஏற்படுத்தப்படும் என்றும் சங்கத் தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். சிறுபடத் தயாரிப்பாளர்கள் கூறியதாவது, அறிவித்தபடி புதிய குழு அமைக்கவில்லை. தொழிலாளர்கள் சம்பளப் பிரச்னை குறித்தும் இன்னும் முடிவு செய்யப்படாததால் 10 நாட்களாக படப்பிடிப்புகள் நடத்தப்படவில்லை.
பெப்சி அமைப்பும் சம்பளப் பிரச்னை குறித்து ஏதும் பேசாமல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த ஏற்பாடுகளை செய்து வருகிறது.
பெப்சியுடன் ஒப்பந்தம் ஏதும் இல்லை என்று கூறிய தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகம் தயாரிப்பாளர்களை கலந்து பேசாமல் தொழிலாளர் நலத்துறை கமிஷனரை திடீரென சந்தித்து பெப்சி பிரச்னை குறித்து எதற்காக பேச வேண்டும்? அவர்கள் தயாரிப்பாளர்களின் நலனை கண்டுகொள்ளாமல் ஏதோ முடிவில் செயல்படுகின்றனர் என்று கூறியுள்ளனர்.
இந்நிலையால் சங்கத்தின் மீது நம்பிக்கையில்லாத சிறு படத் தயாரிப்பாளர்களின் அவசரக் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு சென்னையில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் முடிவில் எடுக்கப்படும் முடிவு தயாரிப்பாளர்கள் சங்க செயல்பாட்டுக்கு செக் வைப்பதாக கூட அமையலாம் என்றும், இதனால் சினிமா தொழிலில் மேலும் பல பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்றும், கொலிவுட் வட்டாரத்தில் கூறப்பட்டுள்ளது.
சிறுபடத் தயாரிப்பாளர்களின் அதிருப்தி குறித்து சங்க நிர்வாகிகள் கண்டுகொள்ளாமல் மௌனம் காப்பது பிரச்னையை மேலும் பெரிதாக்கும் என்றும் அனுபவப்பட்ட தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக