சனி, 18 பிப்ரவரி, 2012

மருதநாயகத்தை தொடங்கவில்லை: கமல்ஹாசன்


மருதநாயகம் படப்பிடிப்பை தொடங்கவில்லை என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.
கடந்த 1997ம் ஆண்டு நடிகர் கமல்ஹாசன் மருதநாயகம் என்ற படத்தை தொடங்கினார். இங்கிலாந்து ராணி எலிசபெத் இதன் படப்பிடிப்பை தொடங்கி வைத்தார்.
மருதநாயகம் 18-ம் நூற்றாண்டில் வாழ்ந்த போர் வீரன் யூசுப்கானை பற்றிய கதை என்பதால், பிரமாண்ட சரித்திர அரங்குகள், போர் வீரர்கள் உடைகள் என்று இதற்கு ரூ.150 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டதால் படத்தை கமல் ஹாசன் கைவிட்டார்.
தற்போது மீண்டும் “மருத நாயகம்” படப்பிடிப்பை தொடங்கப் போவதாகவும் இதில் ரஜினியும் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாகவும் கமல், மும்பையில் பேட்டியளித்ததாக செய்திகள் வெளியாயின.
இது தவறான செய்தி என்றும் கமல்ஹாசன் அவ்வாறு பேட்டி அளிக்கவில்லை என்றும் மறுக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து கமல்ஹாசன் தரப்பில் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது, மருதநாயகம் படப்பிடிப்பை தொடங்கப் போவதாகவும் ரஜினியும் அதில் நடிப்பார் என்று வெளியான செய்தி உண்மையல்ல.
கடந்த 15 வருடத்துக்கு முன்பு நானும் ரஜினியும் நட்சத்திர கலை விழாவுக்காக சிங்கப்பூர் சென்ற போது நான் அளித்த பேட்டியை எடுத்து இப்போது சொன்னதாக இணைய தளம் ஒன்று வெளியிட்டுள்ளது.
நான் தற்போது விஸ்வரூபம் படப்பிடிப்பில் இருக்கிறேன். இப்படம் முடிந்ததும் ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரிக்கும் “தலைவன் இருக்கின்றான்” என்ற படத்தில் நடிக்க உள்ளேன் என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக