புதன், 18 ஏப்ரல், 2012

அரசாங்கத்திடம் புலம்பும் உதயநிதி ஸ்டாலின்: அறிக்கை வெளியீடு


7ஆம் அறிவு திரைப்படத்துக்கு அரசு அறிவித்த புதிய அரசாணை(2) நாள் 3/01/12 படி வரி விலக்கு கோரி 10/01/12 அன்று விண்ணப்பிக்கப்பட்டது.
இரண்டு மாத தாமதத்துக்கு பின்னர் அணைத்து திரையரங்குளிலும் படம் ஓடி முடியும் வரை காத்திருந்து இறுதியாக ஒரு திரையரங்கில் கூட ஓடவி்ல்லை என்பதை உறுதிசெய்து கொண்டு 05/03/12 அன்று வரிவிலக்கு வழங்கி அரசு உத்தரவிட்டது.
இந்த உத்தரவினால் ஒரு பயனும் அடைந்துவிடக்கூடாது என்பதில் அரசு கவனமாக இருந்தது. 7ஆம் அறிவு படத்துக்கு வரி விலக்கு கோரி விண்ணப்பித்த நாளுக்கும், வரிவிலக்கு வழங்கிய நாளுக்கும் இடைப்பட்ட நாட்களில் கீழ்கண்ட படங்களுக்கு வரிவிலக்கு வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது.
1.கொண்டான் கொடுத்தான்
2.வேலாயுதம்
3.மெரினா
4.காதல் பிசாசே
5.காதலர் கதை
6.நண்பன்
7.வழிவிடு கண்ணே வழிவிடு
8.விளையாடவா
9.விருதுநகர் சந்திப்பு
10.வேட்டை
11.நாங்க
இதன் மூலம் வேண்டுமென்றே எங்கள் 7 ஆம் அறிவு திரைப்படத்துக்கு மட்டும் காலதாமதமாக வரிவிலக்கு அளித்துள்ளது உறுதியாகிறது. 19/03/12 ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைத்தது.
21/03/12 கேளிக்கை வரி விலக்கு கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. 22/03/12 ல் ஒரு குறிப்பிட்ட படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைத்தது.
ஒரு படத்துக்கு வரி விலக்கு கோரி விண்ணப்பிக்கும் போது தணிக்கை சான்றிதழ் இணைப்பு அவசியம் என்பதால் அந்த குறிப்பிட்ட படத்துக்கு 22/03/12 அல்லது அதற்கு பின்னர் தான் வரிவிலக்கு கோரி விண்ணப்பித்திருக்க முடியும்.
30/03/12 கேளிக்கை வரி விலக்கு அந்த குறிப்பிட்ட படத்துக்கு அளிக்கப்பட்டது (அதாவது 7 நாட்களில் வரிவிலக்கு அளிக்கப்பட்டது. “ஒரு கல் ஒரு கண்ணாடி” திரைப்படத்திற்கு விண்ணப்பம் செய்து சுமார் ஒரு மாதம் ஆகியும் வரி விலக்கு அளிக்க திரைப்படம் பார்ப்பதற்கு நாள் குறிக்கப்படவில்லை. ஆகவே 12/04/12 அன்று சென்னை உயர்நீதி மன்றத்தை நாடிய போது சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் படி 16/04/12 அன்று திரைப்படம் பார்க்க நாள் குறிக்கப்பட்டது.
16/04/12 அன்று “ஒரு கல் ஒரு கண்ணாடி” திரைப்படத்தை பார்த்த அரசு அமைத்த 7 பேர் கொண்ட குழுவின் அனைத்து உறுப்பினர்களும் இத்திரைப்படம் வரி விலக்கு அளிப்பதற்கு தகுதியானது அல்ல என பரிந்துரை செய்துள்ளதாகவும் அதனால் ”ஒரு கல் ஒரு கண்ணாடி” திரைப்படம் தமிழ்நாடு கேளிக்கைகள் வரிச்சட்டம் 1939ன்கீழ் கேளிக்கை வரியில் இருந்து விலக்க அளிக்க தகுதியானது அல்ல என முடிவு செய்து அரசாணை வெளியிட்டுள்ளதாகவும் உயர்நீதி மன்றத்தில் அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாணை(2): நாள் 30/01/12 படி வரி விலக்கு அளிப்பதற்கு நான்கு வழி முறைகள் கொடுக்கப்பட்டன.
தமிழ் பெயர் தவிர்த்து
1. ”U” சான்றிதழ்
2. படத்தின் கதைக்கு தமிழ் மொழி மற்றும் பண்பாட்டு வளர்ச்சிக்கு உகந்ததாக இருக்க வேண்டும்
3. திரைப்படத்தின் தேவையை கருதி பிற மொழிகளை பயன் படுத்தும் காட்சிகளை தவிர பெருமளவில் திரைப்படத்தின் வசனங்கள் தமிழ் மொழியில் இருத்தல் வேண்டும்
4. திரைப்படத்தில் வன்முறை மற்றும் ஆபாசங்கள் அதிக அளவில் இடம் பெருமேயானால் அத்திரைப்படம் வரிவிலக்கு பெறுவதற்கான தகுதியை இழக்கும்.
இதில் எங்கள் திரைப்படத்திற்கு எந்த குறைபாடு உள்ளதென்று எந்த உறுப்பினர் கூறியுள்ளார் என்பது தெரிவிக்கப்படவில்லை. இந்த நேரத்தில் நாங்கள் கூறுவது எந்த திரைப்படத்தையோ, சக கலைஞர்களையோ, சக தயாரிப்பாளர்களையோ புண்படுத்த அல்ல. சமீபத்தில் கேளிக்கை வரி கொடுக்கப்பட்ட ஒரு திரைப்படத்தில் ஆங்கிலம் கலந்த தமிழ் பாடல் உள்ளது. கேளிக்கை விடுதியல் வைத்து திருமணம் நடப்பது போல் காட்சி வருகிறது.
இது போன்ற திரைப்படத்திற்கு வரி விலக்கு அளித்து விட்டு எங்கள் படத்திற்கு வரி விலக்கு அளிக்க மறுப்பது எந்த வகையில் நியாயம்?. இந்த காட்சிகள் தமிழ் கலாசாரத்தையும், மொழியையும் வளர்ப்பதாக எப்படி கருத முடியும்?.
வன்முறை அதிகமாக உள்ள மற்றும் ஆங்கில கலப்பு அதிகமாக உள்ள படத்துக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து மக்களையும் கவர்ந்த ”ஒரு கல் ஒரு கண்ணாடி” படத்துக்கு வரி விலக்கு அளிக்க மறுப்பது என்ன நியாயம்?.
எனது தந்தை அரசியலில் இருப்பதால் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எங்கள் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படங்களை பாதிக்கும் வகையில் அரசு திட்டமிட்டு பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இதனால் எனக்கு மட்டும் பாதிப்பு இல்லை.
என்னை நம்பி இத்திரைப்படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். எங்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய உரிமைகள் மறுக்கப்படுவதால் அனைத்து ஊடக நண்பர்களாகிய முறையிடுகிறேன்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக